திருச்சி ஆயர் டிவோட்டா அவர்களின் பணி ஓய்வு ஏற்பு


ஜூலை,14,2018. இந்தியாவின் திருச்சிராப்பள்ளி மறைமாவட்ட ஆயர் ஆன்டனி டிவோட்டா அவர்களின் பணி ஓய்வை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூலை 14, இச்சனிக்கிழமையன்று ஏற்றுக்கொண்டுள்ளார்.

1943ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி, சென்னை சாந்தோமில் பிறந்த ஆயர் ஆன்டனி டிவோட்டா அவர்கள், 1971ம் ஆண்டு ஆகஸ்ட் 27ம் தேதியன்று, சென்னை-மயிலை உயர்மறைமாவட்டத்திற்கென அருள்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.

இரண்டாயிரமாம் ஆண்டு டிசம்பர் 12ம் நாளன்று திருச்சி மறைமாவட்ட ஆயராக நியமிக்கப்பட்டு, 2001ம் ஆண்டு சனவரி 28ம் நாளன்று ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்டார், ஆயர் ஆன்டனி டிவோட்டா.

திருச்சி மறைமாவட்ட ஆயராகப் பணியை ஏற்பதற்குமுன்னர், சென்னை-மயிலை உயர்மறைமாவட்டத்தின் தலைமைக் குருவாகவும் பணியாற்றியிருக்கின்றார், ஆயர் ஆன்டனி டிவோட்டா.

1606ம் ஆண்டில், கொச்சின் மறைமாவட்டத்திலிருந்து, மதுரை மறைப்பணித்தளமாக மாறிய திருச்சி மறைமாவட்டம், 1886ம் ஆண்டு செப்டம்பர் முதல் தேதி மதுரை மறைமாவட்டமாக உயர்த்தப்பட்டது. பின், 1887ம் ஆண்டு ஜூன் 7ம் தேதி திருச்சினாப்பள்ளி மறைமாவட்டமாகப் பெயரிடப்பட்டு, 1950ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதி, திருச்சிராப்பள்ளி மறைமாவட்டமாகப் பெயர் மாற்றப்பட்டது.       

மேலும், வருகிற அக்டோபரில் நடைபெறவிருக்கும் இளையோர் பற்றிய உலக ஆயர்கள் மாமன்றத்திற்கு, தலைவர் பிரதிநிதிகளாக, ஈராக் கர்தினால் இரபேல் லூயிஸ் சாக்கோ, மடகாஸ்கர் கர்தினால் Désiré TSARAHAZANA, மியான்மார் கர்தினால் சார்லஸ் மாங் போ, பாப்புவா நியு கினி கர்தினால் John RIBAT ஆகியோரை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூலை 14, இச்சனிக்கிழமையன்று நியமித்துள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் செய்திகள்


திருப்பீடம், சீனா கலந்துரையாடல்


ஜூலை,14,2018. உலகளாவிய நடைமுறையின்படி, நாடுகளுக்கு இடையே இடம்பெறும் கலந்துரையாடல்கள் முழுவதும் இரகசியம் காக்கப்படும் மற்றும் இவற்றின் கடைசி முடிவுகளே பொதுவாக வெளியிடப்படும் என்ற காரணத்தால், திருப்பீடத்திற்கும் சீன அதிகாரிகளுக்கும் இடையே இடம்பெறும் கலந்துரையாடல்கள் பற்றிய விவரங்கள் வெளியிடப்படாமல் உள்ளன என்று, வத்திக்கான் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சீனாவில், சில ஆயர்கள், திருஅவை சட்டத்திற்கு மாறாக நியமிக்கப்பட்டவர்கள் என்றும், மற்றவர்கள், சீன அரசின் அங்கீகாரம் இல்லாமல் உள்ளனர் என்றும் கூறியுள்ள அதிகாரிகள், திருப்பீடத்திற்கும் சீனாவுக்கும் இடையே இடம்பெறும் கலந்துரையாடல்களில், இந்தப் பிரச்சனைகளைத் தீர்க்கும் வழிகள் ஆராயப்படுகின்றன எனத் தெரிவித்துள்ளனர்.

இதன் வழியாக ஒரு நேர்மறையான புதுப்பித்தலைத் தொடங்கலாம் எனவும் கூறியுள்ள அதிகாரிகள், இவ்வுரையாடல்களில் ஒரு புரிந்துணர்வு ஏற்பட்டால், இது, மறைமாவட்டங்களின் மேய்ப்புப்பணி தலைவர்களிடையே ஒன்றிப்பைக் கட்டியெழுப்புவதற்கு, திருஅவைக்கு உதவும் எனவும் கூறியுள்ளனர்.

தற்போது பல மறைமாவட்டங்கள் ஆயர்களின்றி உள்ளன என்பதையும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் செய்திகள்


எதிர்மறை பாகுபாடுகளை அகற்ற சமுதாயத்திற்கு இளையோரின் அறைகூவல்


ஜூலை,16,2018. இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்து பல ஆண்டுகள் கடந்துள்ளபோதிலும், வன்முறை என்பது இன்னும் வெற்றிகொள்ளப்பட்டவில்லை என்பதை மையக்கருத்தாகக் கொண்டு, இஞ்ஞாயிறன்று செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளனர், சான் எஜிதியோவின் ஐரோப்பிய இளையோர் குழு.

சான் எஜிதியோ அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நட்புணர்வு குறித்த உலக கருத்தரங்கில் கடந்த வெள்ளி முதல் கலந்துகொண்ட ஐரோப்பிய இளையோர் குழு, அக்கருத்தரங்கின் இறுதி நாளான இஞ்ஞாயிறன்று, உரோம் புறநகர் பகுதியில் உள்ள Fosse Ardeatine எனுமிடத்தில் கூடி, மனிதர்கள் பல வழிகளிலும் பாகுபாட்டுடன் நடத்தப்படுவது தடை செய்யப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி, இந்த அறிக்கையை வெளியிட்டனர்.

1944ம் ஆண்டு, ஜெர்மன் படைகளால் 335 அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட Fosse Ardeatine நினைவிடத்தில் அவர்களின் கல்லறைகளுக்கு மலர்களை வைத்து செபித்த இந்த இளையோர் குழுவுக்கு, சான் எஜிதியோ கத்தோலிக்க அமைப்பின் தலைவர்களும், உரோம் நகர் யூத தலைமைக் குருவும் உரைகள் வழங்கி, பாகுபாடுகளுக்கு எதிராக இளையோர் மேற்கொள்ளும் முயற்சிக்கு தங்கள் ஊக்கத்தை வழங்கினர்.

இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த பின்னர், இத்தனை ஆண்டுகள் சென்றாலும், வெற்றிகொள்ளப்படமுடியாத வன்முறை என்பது, ஐரோப்பிய கண்டத்தில், இன்னும் மாசுகேட்டை வளர்த்து வருகின்றது என தங்கள் அறிக்கையில் கவலையை வெளியிட்டுள்ளனர், சான் எஜிதியோ ஐரோப்பிய இளையோர்.

இன்றையை உலகின் பாராமுகம், மற்றவர் குறித்த அக்கறையின்மை, முற்சார்பு எண்ணங்கள், யூத விரோதப்போக்குகள், இனவெறி ஆகியவற்றால் அதிகமாகப் பாதிக்கப்படுவது, ஏழைகளும், முதியோரும், வீடற்றோரும், மாற்றுத்திறனாளிகளும், அகதிகளும், குடிபெயர்வோரும் என்பதை இளையோரின் அறிக்கை கூறியுள்ளது.

அனைவரும் நட்புணர்வில் வாழும் ஓர் ஐரோப்பாவை கட்டியெழுப்புவதற்கு உழைக்க வேண்டிய கடமையையும் தங்கள் செய்தியில் வலியுறுத்தியுள்ளனர், இந்த இளையோர்.

ஆதாரம் : வத்திக்கான் செய்திகள்